ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 

இந்த சீசனில் கடும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய சம்பவம் என்றால், அது மன்கட் ரன் அவுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின். 

அஷ்வின் அப்படி செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஷ்வின் செயல்பட்டதால் அதில் தவறு ஏதும் இல்லை என்று அஷ்வினுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்த நிலையில், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமான செயல் என்ற எதிர்ப்புக்குரல்களும் வலுவாக இருந்தன.

அஷ்வின் பட்லரை அவுட் செய்தது தவறு இல்லை; எனினும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணல் பாண்டியா, மயன்க் அகர்வாலுக்கு மன்கட் ரன் அவுட் குறித்த எச்சரிக்கை விடுத்தார். அஷ்வின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டிருந்த நிலையில், குருணலின் செயல் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தவானுக்கு மன்கட் வார்னிங் கொடுத்தார் அஷ்வின். பஞ்சாப் அணி 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அவுட்டாகிவிட, இரண்டாவது விக்கெட்டுக்கு தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடி, ஆட்டத்தை பஞ்சாப்பிடமிருந்து எடுத்து சென்றனர். 

அப்போது 13வது ஓவரை வீசிய அஷ்வின், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தவானுக்கு மன்கட் வார்னிங் கொடுக்கும் வகையில் பந்துவீசாமல் திரும்பி சென்றார். ஆனால் தவான் கிரீஸுக்குள் தான் நின்றார். அஷ்வினுக்கு கிண்டலாக பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த பந்தை அஷ்வின் வீசவரும்போது நின்ற இடத்தில் இருந்தே ஓடினார். அவரது மூவ்மெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.