ஐபிஎல் 13வது சீசனில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக அனுபவ ஆரோன் ஃபின்ச்சும், 20 வயது இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரை மட்டும் நிதானமாக கையாண்ட தேவ்தத் படிக்கல், 2வது ஓவர் முதல் அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.

சந்தீப் ஷர்மா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளையும், புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், நடராஜன் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் விளாசி, ஆர்சிபி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மிட்செல் மார்ஷ் வீசிய ஐந்தாவது ஓவரில் ஸ்டிரைட்டில் பறக்கவிட்டு பவுண்டரி அடித்தார்.

கவர் திசை, மிட் விக்கெட், ஸ்டிரைட் திசை என அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். படிக்கல் அடித்து ஆடியதால், அவருக்கு முமெண்டம் மற்றும் ஃப்ளோவை தடுக்காமல் சிங்கிள் எடுத்துக்கொடுத்து ஆடிய ஃபின்ச், விஜய் சங்கர் வீசிய நோ பாலில் மிகப்பெரிய சிக்ஸரை விளாசி தனது அதிரடியை தொடங்கினார்.

புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மாவின் ஃபாஸ்ட் பவுலிங்கை மட்டுமல்லாது, ரஷீத் கான் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் ஸ்பின் பவுலிங்கையும் அடித்து ஆடிய படிக்கல், 36 பந்தில் அரைசதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து, ஆர்சிபிக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

தேவ்தத் படிக்கல்லின் அதிரடியால் 10 ஓவரில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்களை குவித்தது. அரைசதம் அடித்த படிக்கல்லை விஜய் சங்கர் 11வது ஒவரில் போல்டாக்கி  அனுப்பினார். 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபின்ச்சும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.