ஐபிஎல் 13வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் டெவாட்டியா, ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி உள்ளிட்ட வீரர்கள் அபாரமாக ஆடி அசத்திவருகின்றனர்.

குறிப்பாக ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக ஆடும் தேவ்தத் படிக்கல், இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே அருமையாக ஆடிவருகிறார். பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக ஆர்சிபி ஆடிவரும் நிலையில், இந்த போட்டியிலும் படிக்கல் அரைசதம் அடித்தார்.

இதன்மூலம் இந்த சீசனில் ஐந்து அரைசதங்களை அடித்துள்ள படிக்கல், அறிமுக ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத வீரர் என்ற பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர்(439 - 2015 சீசன்) சாதனையை முறியடித்து ஷார்ன் மார்ஷுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரரான ஷான் மார்ஷ் 2008 ஐபிஎல் சீசனில் 616 ரன்கள் அடித்தார். அந்த சீசனில் ஆடும்போது, அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியதில்லை. அந்த ஐபிஎல்லில் நன்றாக ஆடியதன் அடிப்படையில் தான் ஆஸ்திரேலிய அணியிலேயே இடம்பிடித்தார். 

இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயரை விட அறிமுக ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்து அவரது சாதனையை முறியடித்துள்ளார் தேவ்தத் படிக்கல்.