ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சிஎஸ்கே அணி வீரர்களான தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட அந்த அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், பின்னர் பிசிசிஐ அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் மேலும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு மத்தியில் இந்த சீசனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே பிசிசிஐக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஐபிஎல் 13வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை சேர்ந்த உதவி ஃபிசியோதெரப்பிஸ்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த 2 பரிசோதனைகளாவது நெகட்டிவ் என்று வந்தால்தான் அவர் மீண்டும் அணியினருடன் இணைய முடியும். அந்த குறிப்பிட்ட நபருக்கு ஏற்கனவே 2 முறை செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில், 3வது பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணி, வரும் 20ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக தங்களது முதல் போட்டியை ஆடுகிறது. ஐபிஎல்லுக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றவர்களில் அடுத்தடுத்து ஒவ்வொருவருக்காக கொரோனா உறுதியாவது, பிசிசிஐக்கான சவாலை அதிகரித்துக்கொண்டே உள்ளது.