Asianet News TamilAsianet News Tamil

இந்த அளவுக்கு ஆகும்ணு நாங்க சத்தியமா நெனைக்கல - ஷ்ரேயாஸ் ஐயர்

186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர்.

delhi capitals skipper shreyas iyer opinion about the match against kkr
Author
India, First Published Mar 31, 2019, 3:20 PM IST

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனுக்கு பதிலாக நாயக் களமிறக்கப்பட்டார். நாயக்கும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் மந்தமாக தொடங்கினர். 16 பந்துகளில் வெறும் 7 ரன்கள் அடித்து நாயக் வெளியேறினார். லின் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்த கேகேஆர் அணி, 61 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் 10 ஓவர் முடிவில் கேகேஆர் அணி வெறும் 65 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரே ரசல் ஜோடி களத்தில் நிலைத்து நின்றதோடு, டெல்லி அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். வழக்கம்போலவே அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். ஆனால் 18வது ஓவரில் ரசல் ஆட்டமிழந்துவிட்டார். எஞ்சிய 2 ஓவர்களையும் ரசல் ஆடியிருந்தால் கேகேஆர் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கும். அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கும் அதற்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழக்க, பியூஸ் சாவலும் குல்தீப் யாதவும் இணைந்து இன்னிங்ஸை முடித்துவைத்தனர். 20 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 185 ரன்களை குவித்தது. 

186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். முதல் இரண்டு போட்டிகளில் மந்தமாக தொடங்கிய தவான், நேற்றைய போட்டியில் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். எனினும் அவரது இன்னிங்ஸ் நீடிக்கவில்லை. 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பிரித்வி ஷா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 11வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்துவிட்டது டெல்லி அணி. இரண்டாவது இன்னிங்ஸில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடியது டெல்லி அணி. அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 

அதன்பிறகு பிரித்வி ஷாவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 1 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 99 ரன்களில் அவுட்டாகி நூழிலையில் சதத்தை தவறவிட்டார். பிரித்வி ஷாவின் விக்கெட்டுக்கு பிறகு ஆட்டம் மாறியது. 19வது ஓவரில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரில் ஹனுமா விஹாரியும் கோலின் இங்கிராமும் களத்தில் இருந்தனர். நெருக்கடியான சூழலில் அந்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அபாரமாக வீசி 5 ரன்களில் கட்டுப்படுத்தினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், இரண்டாம் ரன் ஓடும்போது இங்கிராம் அவுட்டாக, போட்டி டிராவில் முடிந்தது. 

delhi capitals skipper shreyas iyer opinion about the match against kkr

இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அந்த ஓவரில் 10 ரன்கள் அடித்தது. 11 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ரசலும் தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினர். முக்கியமான அந்த ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்திலேயே ரசல் பவுண்டரி அடித்தார். அடுத்த 5 பந்துகளையும் ரபாடா அபாரமாக வீசினார். இரண்டாவது பந்தை யார்க்கர் போட்டு ரசலை கட்டுப்படுத்தினார். அடுத்த பந்தையும் தரமான யார்க்கராக போட்டு ரசலை கிளீன் போல்டாக்கினார். அடுத்த 3 பந்துகளிலும் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ரபாடா. ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

போட்டி முடிந்ததும் இந்த போட்டி குறித்து பேசிய டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நாங்கள் கடைசி ஓவரிலோ அல்லது 19வது ஓவரிலோ வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு கடினமாக செல்லும் என்று கொஞ்சம் கூட நினைக்கவேயில்லை. அதற்கான மொத்த கிரெடிட்டும் குல்தீப் யாதவையே சாரும். கடும் நெருக்கடியில் கடைசி ஓவரை அபாரமாக வீசி கட்டுப்படுத்தினார் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios