ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும்  போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போல்ட் வீசிய முதல் பந்திலேயே டக் அவுட்டானார். ரஹானேவும் 2 ரன்களில் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, தவான் பதினைந்து ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 22 ரன்களுக்கே டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். இந்த சீசன் முழுவதும் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், முக்கியமான இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெத் ஓவர்களில் டெல்லி அணியின் ரன்ரேட் குறைந்தது. 

ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போல்ட், குல்ட்டர்நைல், பும்ரா ஆகிய மூவரும் டெத் ஓவர்களை அருமையாக வீசி ரன்னை கட்டுப்படுத்தினர். ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்தில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவரில் டெல்லி அணி 156 ரன்கள் அடித்து 157 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.