ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தொடங்கிவிட்டன. ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளுமே உள்ளன. 

இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிராத கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகள் தான் முதல் முறையாக கோப்பையை வெல்வதில் உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளன.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் துடிப்பான டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங், அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். அதனால் வீரர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்து வைத்திருக்கின்றனர். 

அப்படியிருக்கையில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக, மார்ச் முதல் வாரத்திலேயே அறிவித்திருந்தார். நல்ல ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆட, ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், மார்ச் 29ம் தேதி முன்பு தொடங்குவதாக இருந்த ஐபிஎல்லில் இருந்து விலகினார். 

வோக்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்ட்ஜேவை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்துள்ளது. அன்ரிச் நோர்ட்ஜே கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமானார். தென்னாப்பிரிக்க அணிக்காக ஆறு டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் நோர்ட்ஜே ஆடியுள்ளார். இந்நிலையில், அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

கடந்த ஆண்டு கேகேஆர் அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் வோக்ஸ், காயம் காரணமாக தனது முதல் ஐபிஎல் சீசனில் ஆடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், இம்முறையும் அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிச்சன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரஹானே, அஷ்வின், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.