ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று மோதின. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணிக்கு இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் மட்டுமே ஆறுதலளித்தார். தொடக்க வீரர் ஃபிலிப் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஐந்தாவது ஓவரில் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, படிக்கல்லுடன் ஜோடி சேர்ந்தார்.

அஷ்வினின் பந்தில் கோலி அடித்த பந்தை லாங் ஆனில் கேட்ச் வாய்ப்பை நோர்க்யா தவறவிட்டார். ஆனால் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளாத கோலி 29  ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் அடித்து ஆடிய படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் தனது ஐந்தாவது அரைசதத்தை பதிவு செய்த படிக்கல், சரியாக 50 ரன்களுக்கு நோர்க்யா வீசிய இன்னிங்ஸின் பதினாறாவது ஓவரில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் மோரிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

டிவில்லியர்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள்  அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரின் 2வது பந்தில் ரன் அவுட்டானார். இதையடுத்து 20 ஓவரில் ஆர்சிபி அணி வெறும் 152 ரன்கள் மட்டுமே அடித்து, 153 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.

153 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் அனுபவ வீரர்கள் தவான் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இலக்கு கடினமில்லை என்பதால் அவசரப்படாமல் தவான் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி 3வது விக்கெட்டுக்கு 88 ரன்களை குவித்தனர். தவான் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் அரைசதம் அடித்த ரஹானே 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் கூட, ஸ்டோய்னிஸும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 19வது ஓவரில் இலக்கை அடித்தனர். இதையடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

ஆர்சிபி அணி தோற்றிருந்தாலும் கூட, பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. 17.3 ஓவருக்குள் டெல்லி கேபிடள்ஸ் அணி ஆர்சிபியை வீழ்த்தியிருந்தால், 14 புள்ளிகளை பெற்றுள்ள ஆர்சிபி அணியின் நெட் ரன்ரேட், அதே 14 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணியை விட குறைந்திருக்கும். அப்படி குறைந்திருந்தால், நாளை மும்பை இந்தியன்ஸை சன்ரைசர்ஸ் வீழ்த்தும் பட்சத்தில் ஆர்சிபி வெளியேறி, கேகேஆர் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருக்கும். ஆனால் டெல்லி கேபிடள்ஸ் 19வது ஓவரில் தான் வென்றது என்பதால், கேகேஆரை விட ஆர்சிபியின் நெட் ரன்ரேட் கூடுதலாக இருப்பதால், சன்ரைசர்ஸ் ஜெயித்தாலும், தோற்றாலும் அது ஆர்சிபியை பாதிக்காது.