ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட் ஹோம், ஷிவம் துபே என அனுபவம் மற்றும் இளமை நிறைந்த கலவையிலான அதிரடி பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தும் வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பார்த்திவ் படேலை தவிர வேறு யாருமே இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர் உட்பட அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 100 ரன்களுக்கும் குறைவாக ஆர்சிபி அணி இரண்டாவது முறையாக நேற்று சுருண்டது.

அந்த 71 ரன்கள் என்ற எளிய இலக்கையே 18வது ஓவரில்தான் சிஎஸ்கே அணி எட்டியது. அந்தளவிற்கு சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது.வழக்கமாக கோலியை அவ்வளவு எளிதாக அவுட்டாக்க முடியாது. ஆனால் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் தூக்கி அடித்து அவுட்டானார். பொதுவாக கோலி பவுண்டரிகள் தான் அடிப்பார். அரிதாகத்தான் தூக்கி அடிப்பார். அதனால்தான் கோலியை அவுட்டாக்குவது சிரமம். அவர் எப்போதாவது தூக்கி அடித்தாலும், அதை சரியாக அடிப்பார். ஆனால் நேற்று தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த கோலியால், அடுத்த 5 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை. அந்த ஓவரை மிகவும் துல்லியமாக வீசி கோலிக்கு நெருக்கடி கொடுத்தார். அந்த 5 பந்துகளில் எப்படியாவது ரன் அடித்துவிட வேண்டும் என்று கோலி முயற்சித்தும் முடியவில்லை. அதனால் ரன்ரேட் குறைந்து ஏற்பட்ட நெருக்கடியில்தான் ஹர்பஜன் சிங் வீசிய அடுத்த ஓவரில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.