ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும் ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர். இந்த சீசனில் இதுவரை மிடில் ஆர்டரில் இறக்கப்பட்டு வந்த உத்தப்பா, இந்த போட்டியில் தான் முதல் முறையாக ஓபனிங்கில் இறங்கினார்.

ராபின் உத்தப்பா தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். உத்தப்பா ஒருமுனையில் அடித்து ஆடியதால் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் பவர்ப்ளேயில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய உத்தப்பா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார்.

கடந்த சில சீசன்களாகவே பெரியளவில் ஆடிராத உத்தப்பா, இந்த போட்டியில், அவரது கெரியரின் ஆரம்பத்தில் ஆடியதை போல, நடந்து வந்தெல்லாம் ஷாட்டுகளை ஆடி அசத்தினார். 22 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 41 ரன்கள் அடித்து சாஹலின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கடுத்த பந்திலேயே சஞ்சு சாம்சனும் 9 ரன்களுக்கு நடையை கட்டியதால், பட்லர் மற்றும் ஸ்மித்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. செட்டில் பேட்ஸ்மேன் உத்தப்பா அவுட்டானதால் ரன் வேகமும் குறைந்தது.

பட்லர் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்மித் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 57 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். ராகுல் டெவாட்டியா 11 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 177 ரன்களை அடித்து, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் ஃபின்ச் 14 ரன்களில் ஷ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க, அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி, படிக்கல் ஆகிய இருவருமே பெரிய ஷாட் கனெக்ட் ஆகாமல் மெதுவாக ஆடியதால் ரன் வேகம் குறைந்தது.

வழக்கமாக ஆரம்பதம் முதலே அடித்து ஆடக்கூடிய படிக்கல், இந்த போட்டியில் தட்டுத்தடுமாறி தான் ஆடினார். கடைசிவரை தட்டுத்தடுமாறியே ஆடிய  படிக்கல், அப்படியே அவுட்டும் ஆனார். 37 பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, களத்தில் செட்டில் ஆன பின்னர் அடித்து ஆட ஆரம்பித்த கோலி, 32 பந்தில் 43 ரன்களுக்கு கார்த்திக் தியாகியின் பந்தில் டெவாட்டியாவின் அருமையான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் டிவில்லியர்ஸும் குர்கீரத் சிங் மன்னும் களத்தில் ஜோடி சேர்ந்தனர். குர்கீரத் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாதது மட்டுமல்லாது சிங்கிள் கூட எடுக்க முடியாமல் 17வது ஓவரில் திணறினார். அதனால் தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து, கடைசி 2 ஓவரில் ஆர்சிபியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை ஆர்ச்சரிடம் கொடுக்காமல் உனாத்கத்திடம் கொடுக்க, அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்துவிட்டார். அந்த ஓவரில் 25 ரன்கள் அடித்துவிட்டதால், ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் எளிதாக எஞ்சிய 10 ரன்களை அடித்து ஆர்சிபி வெற்றி பெற்றது.22 பந்தில் ஒரேயொரு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாசி ஆர்சிபிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடைசி 2 ஓவரில் ஆர்சிபி 35 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில், 19வது ஓவரை ஆர்ச்சரிடம் கொடுத்து, குறைவான ரன்களை கொடுத்து, கடைசி ஓவரில் நெருக்கடியை அதிகரித்திருப்பதை விடுத்து, 19வது ஓவரை உனாத்கத்திடம் கொடுத்து, அந்த ஓவரிலேயே மேட்ச்சை முடித்துவிட்டார் ஸ்மித். அந்த ஓவரில் 25 ரன்கள் கிடைத்ததால் தான், கடைசி ஓவரில் ஆர்ச்சரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.