Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபியின் தோல்விக்கு அந்த சம்பவம்தான் காரணம்!! செம கடுப்பான கேப்டன் கோலி

முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் அந்த வெற்றி முகத்தை தொடர நினைத்த ஆர்சிபிக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பேயில்லை. 
 

de villiers last over run out is the turning point in mi vs rcb match
Author
Mumbai, First Published Apr 16, 2019, 12:52 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணியின் சோகம் இன்னும் தொடர்கிறது. 

முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் அந்த வெற்றி முகத்தை தொடர நினைத்த ஆர்சிபிக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பேயில்லை. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலியின் பொறுப்பான அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அவர்களின் விக்கெட்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி, மிடில் ஓவர்களில் சற்று மந்தமாக ஆடினாலும், ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 19வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

de villiers last over run out is the turning point in mi vs rcb match

ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம், அந்த அணியின் குறைந்த ஸ்கோர்தான். ஆர்சிபி அணி அடித்திருக்க வேண்டிய ஸ்கோரைவிட 15-20 ரன்கள் இது குறைவு. அபாரமாக ஆடி அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், கடைசி ஓவர் வரை களத்தில் நிலைத்து நின்றார். அதனால் இன்னிங்ஸை சிறப்பாக முடித்துவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர் அவர் தான். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய டிவில்லியர்ஸ், இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார். தான் பேட்டிங் முனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இரண்டாவது ரன்னுக்கு அழைத்தார். ஆனால் அக்‌ஷ்தீப் மறுத்துவிட்டார். அதனால் சிறிது தூரம் ஓடிவிட்டு, அக்‌ஷ்தீப் மறுத்ததும் கிரீஸுக்கு திரும்ப முயன்றார். அதற்குள்ளாக லாங் ஆன் திசையில் இருந்து நேரடியாக ஸ்டம்பில் அடித்து டிவில்லியர்ஸை ரன் அவுட்டாக்கிவிட்டார் பொல்லார்டு. அந்த நேரத்தில் டிவில்லியர்ஸ் பேட்டிங் முனைக்கு செல்வதுதான் முக்கியம். அதற்காக அக்‌ஷ்தீப் தனது விக்கெட்டை பழி கொடுத்திருந்தாலும் தவறில்லை. அதைவிடுத்து டிவில்லியர்ஸ் விக்கெட்டுக்கு காரணமாகிவிட்டார். சரி அவராவது அடிப்பார் என்று பார்த்தால், அடுத்த பந்திலேயே அவரும் அவுட்டாகிவிட்டார். பவன் நேகி 5வது பந்தில் அவுட்டாக கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடைசி ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்தன. 

ஒருவேளை டிவில்லியர்ஸ் இரண்டாவது பந்தில் பேட்டிங் முனைக்கு சென்றிருந்தால், ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்ந்திருக்கும். 171 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்திருந்த நிலையில், அந்த ரன் அவுட் ஆகாமல் டிவில்லியர்ஸ் பேட்டிங் முனைக்கு சென்றிருந்தால் 15 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கும். வான்கடேவில் பந்து நன்றாக சுழன்றதால், ஆர்சிபி அணி மும்பைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த 15 ரன்கள் கூடுதலாக கிடைத்திருந்தால் போட்டி இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் டிவில்லியர்ஸ் இரண்டாவது ரன் அழைத்ததற்கு அக்‌ஷ்தீப் மறுத்ததை அடுத்து கேப்டன் கோலி செம கடுப்பானார். அவரது அதிருப்தியை டக் அவுட்டிலிருந்து வெளிப்படுத்தினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios