ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல்லும் ஆரோன் ஃபின்ச்சும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் ஆடிய படிக்கல், அறிமுக போட்டியிலேயே அருமையாக அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலியும் 14 ரன்களில் அவுட்டாக, டெத் ஓவரில் ஒருசில பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், அணியின் ஸ்கோர் 163ஆக உதவினார். இதையடுத்து 20 ஓவரில் 163 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 164 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

164 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வார்னர், ஸ்டெய்ன் வீசிய 2வது பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார். ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்திருந்த வார்னர், 2வது ஓவரில் ரன் அவுட்டானார்.

உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ஸ்டிரைட் திசையில் அடித்த பந்தை உமேஷ் யாதவ் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. ரன் ஓடுவதற்காக க்ரீஸிலிருந்து நகன்று வந்த வார்னர், உமேஷின் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

வார்னர் பரிதாபமாக ரன் அவுட்டாக, பேர்ஸ்டோவுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இருவரும் நன்றாக ஆடிவருகின்றனர்.