ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் ஆகியோர், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான தொடர் முடிந்துதான் ஐக்கிய அரபு அமீரகம் வருவார்கள் என்பதால், அவர்கள் ஐபிஎல்லின் முதல் ஒருவாரத்தை தவறவிடுவார்கள். 

மற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் மிரட்டலான அதிரடி வீரரான டேவிட் மில்லர், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடவுள்ள கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 8 சீசன்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிவரும் மில்லர், ஆரம்பத்தில் சில சீசன்களில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி பஞ்சாப் அணியின் அச்சுறுத்தும் வீரராக திகழ்ந்தார். ஆனால் கடந்த 2 சீசன்களில் படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து அவரை கழட்டிவிட்டது பஞ்சாப் அணி.

இந்த சீசனில் டேவிட் மில்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடுகிறார். தீவிரமாக பயிற்சி செய்துவரும் மில்லர், வலைப்பயிற்சியில் அங்கித் ராஜ்பூத்தின் பந்தை ஸ்டிரைட் திசையில் தூக்கியடித்தார். அது நேராக பவுலர் ராஜ்பூத்தின் தலைக்கு மேல் மின்னல் வேகத்தில் சென்றது. ராஜ்பூத் உயரமானவர் என்பதால், மில்லர் அடித்த பந்து கிட்டத்தட்ட ராஜ்பூத்தின் தலைக்கு நேராக வந்தது. சுதாரித்துக்கொண்ட ராஜ்பூத் குனிந்துகொண்டதால் தப்பித்தார். ஒரு நொடி ராஜ்பூத்தை மிரட்டிய அந்த ஷாட்டின் வீடியோ இதோ..