ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. 

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

இந்த சீசனிலாவது முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி களமிறங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டுள்ளது ஆர்சிபி அணி.

இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த சீசனில் ஒரேயொரு போட்டி மட்டுமே சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. அதனால் இந்த சீசனில் சிஎஸ்கேவின் ஆட்டத்தைக்காண ஆவலாக உள்ளனர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன.

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. இலக்கை விரட்டுவதில் கோலி வல்லவர். அதேநேரத்தில் செட் செய்த இலக்கை எதிரணியை அடையவிடாத அளவிற்கு கேப்டன்சி செய்வதில் கோலி வல்லவர் அல்ல. எனவே தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.