2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. 12வது சீசன் இன்று தொடங்குகிறது. 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, சொந்த மண்ணான சென்னையில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியுடன் மோதுகிறது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. இதுவரை 3 முறை கோப்பையை வென்ற கெத்துடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனில் ஆடுகிறது. 

முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுவது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டி மாலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், உத்தேச சிஎஸ்கே அணியை பார்ப்போம்.

சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய ஆல்ரவுண்டர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்படும். அந்த வகையில், ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலியா), டேவிட் வில்லி(இங்கிலாந்து), பிராவோ(வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய மூவரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள் என்பதால், இவர்கள் மூவருமே ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார்கள்.

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதால் தங்கள் அணியின் சிறந்த 11 வீரர்களுடன் களமிறங்கத்தான் சிஎஸ்கே விரும்பும். அந்த வகையில் நான்காவது வெளிநாட்டு வீரராக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி களமிறங்குவார். இவர்கள் தவிர ராயுடு, ரெய்னா, கேதர் ஜாதவ், ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் களமிறங்குவர். 

உத்தேச சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், பிராவோ, டேவிட் வில்லி, ஜடேஜா, ஹர்பஜன் சிங், லுங்கி நிகிடி, தீபக் சாஹர்/மோஹித் சர்மா.