ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி, 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இந்த சீசனில் முதல் 10 போட்டிகளில் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. டுபிளெசிஸ் மட்டும் ஒருசில போட்டிகளில் நன்றாக ஆடினார். ஆனால் வாட்சன், ரெய்னா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வந்தனர். 

ஆர்சிபி அணியிடம் போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூழலை உணர்ந்து பொறுப்பாக ஆட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வாட்சன், ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடினர். வாட்சன் 96 ரன்கள் அடித்து வெறும் 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதேபோல இந்த சீசனில் முதல் 10 போட்டிகளில் சரியாக ஆடாத ரெய்னா, சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடி ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். ஒரே போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்களான வாட்சனும் ரெய்னாவும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் ஒரு ரன்னில் டுபிளெசிஸ் அவுட்டாக, மூன்றாவது ஓவரிலேயே களத்திற்கு வந்த ரெய்னா, சந்தீப் சர்மா வீசிய 6வது ஓவரில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 22 ரன்களை குவித்தார். அந்த ஓவரில் தான் ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கம் திரும்பியது. முதல் 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், 6வது ஓவரில் ஆட்டத்தையே சிஎஸ்கே வசப்படுத்தினார் ரெய்னா. அந்த வீடியோ இதோ.. ரெய்னா ஃபார்முக்கு திரும்பியிருப்பது சிஎஸ்கே அணியையும் ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.