ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் கடந்த மாதம் 20ம் தேதி வாக்கிலேயே அங்கு சென்றுவிட்டன. சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்டன. 

இதற்கிடையே, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபட்டால், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரரும் துணை கேப்டனுமான ரெய்னா. இதையடுத்து, ரெய்னாவை சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் கடுமையாக சாடியிருந்தார். அதனால் இனிமேல் ரெய்னா, சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், ரெய்னா கடைசிவரை சிஎஸ்கே அணியில் மட்டும்தான் ஆடுவேன் என்பதை தெளிவுபடுத்தியதுடன், சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.

ரெய்னா சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து கேப்டன் தோனி தான் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் துணை கேப்டனான ரெய்னா, இந்த சீசனில் ஆடுவாரா இல்லையா என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை. எனவே, ரெய்னா இல்லையென்றால், வேறு யார் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன்(Vice Captain) என்று ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேட்டிருந்தார்.

அதற்கு, வார்த்தைகளில் விளையாடி, சாமர்த்தியமாக பதிலளித்து சிஎஸ்கே அணி நிர்வாகம்.  Wise Captain(புத்திசாலித்தனமான கேப்டன்) இருக்க பயமேன் என்று சிஎஸ்கே பதிலளித்துள்ளது. ஒரே மாதிரியான உச்சரிப்பை கொண்ட Vice - Wise என்ற வார்த்தைகளை வைத்து சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தது சிஎஸ்கே.