சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டுப்ளெசிஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே துஷார் தேஷ்பாண்டேவின் பவுன்ஸரில் டக் அவுட்டாகி வெளியேறினார் சாம் கரன். அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். டுப்ளெசிஸும் வாட்சனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். அடுத்த விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 9 ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

அதன்பின்னர் டுப்ளெசிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, வாட்சனும் அஷ்வின் ஓவரில் பவுண்டரிகளை விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் தோனியும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ராயுடுவும் ஜடேஜாவும் இணைந்து சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினர். ராயுடு 25 பந்தில் 45 ரன்களும், கடைசி நேரத்தில் களத்திற்கு வந்த ஜடேஜா 13 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 33 ரன்களை விளாச, சிஎஸ்கே அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 

ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் கடைசி 2 ஓவரில் மட்டும் 32 ரன்கள் கிடைத்தது. ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் 180 ரன்கள் என்பதே டெல்லி கேபிடள்ஸுக்கு எளிய இலக்கு. ஜடேஜா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடவில்லையென்றால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்காது.