ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அங்கு சென்று, பயிற்சியை தொடங்கியுள்ளன. சிஎஸ்கே அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட அந்த அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அந்த அணி மட்டும் பயிற்சியை தொடங்குவது தாமதமான நிலையில், கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சிஎஸ்கே அணியை சேர்ந்த மற்றவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. எனவே அந்த அணி இன்று மாலை அல்லது நாளை பயிற்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், அந்த அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி இந்தியா திரும்பினார். ரெய்னா அவசரத்தில் முடிவெடுத்து கோபமாக இந்தியா திரும்பினாலும், சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் ரெய்னா இந்த சீசனில் ஆடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால், நினைத்தால் போவதும் வருவதுமாக இருக்க முடியாது. 

எனவே ரெய்னா ஆடுவதே சந்தேகமாக உள்ள நிலையில், ஹர்பஜன் சிங்கும், ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். ஹர்பஜன் சிங், சென்னையில் நடந்த சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை. ஹர்பஜன் சிங்கின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஹர்பஜன் சிங் சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர் தாமதமாக, துபாயில் நேரடியாக சிஎஸ்கே அணியில் இணைவார் என்றும் தகவல் வெளியானது.

பின்னர் ஹர்பஜன் சிங் இந்த சீசனில் ஆடுவது சந்தேகம் என்ற தகவல் இருந்துவந்த நிலையில், ஹர்பஜன் சிங் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக இந்த சீசனில் ஆடமுடியாமல் விலகியுள்ளார். கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், தனது அனுபவமான ஸ்பின் பவுலிங்கின் மூலம் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். பவர்ப்ளேயில் அருமையாக வீசி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட அதிரடி வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி  அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங்.

ரெய்னா ஆடுவதே சந்தேகமாகவுள்ள நிலையில், ஹர்பஜன் சிங்கும் விலகியிருப்பது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், கரன் ஷர்மா என சிஎஸ்கே அணியில் பல ஸ்பின்னர்கள் இருப்பதால் பிரச்னையில்லை என்றாலும், ஹர்பஜன் சிங் ஆடாதது சற்று பின்னடைவுதான். 

2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கை, 2018 ஐபிஎல் சீசனில், ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் தொடர்கிறார். ஐபிஎல்லில் 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.