ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் சிலருக்கு என மொத்தம் 10 பேருக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிஎஸ்கே அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக, சென்னையில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது. சிஎஸ்கே அணியை தவிர வேறு எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்தவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்கள் உட்பட 10 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சிஎஸ்கேவின் ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. மற்றொரு வீரருக்கும் கொரோனா இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், அது யார் என்பது தெரியவந்துள்ளது. 23 வயதான இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் தான் அந்த வீரர். ருதுராஜ் கெய்க்வாட்டை, இந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது சிஎஸ்கே அணி. 

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கிடையே, பதான்கோட்டில் தனது உறவினர்கள் மீதான கொடூர தாக்குதலையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில்லிருந்து விலகி, துபாயிலிருந்து இன்று இந்தியாவிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.