ஐபிஎல் 2020: தோனியின் கையில் ரெய்னாவின் குடுமி.. கமுக்கமா ஒதுங்கிய சிஎஸ்கே ஓனர் ஸ்ரீநிவாசன்
ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவது தோனியின் கையில் தான் உள்ளது என்று சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேர் மற்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே ஐபிஎல்லை நடத்துவது பிசிசிஐக்கு கடும் சவாலான காரியமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, சிஎஸ்கே அணியில் பெரிய பிரளயமே நடந்துகொண்டிருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா, திடீரென கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அவரது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் அவரது மாமா உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காகத்தான் ரெய்னா இந்தியா திரும்பிவிட்டதாகவும், ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளிவந்தது.
ஆனால் அணி நிர்வாகத்துடனான அதிருப்தியால் தான் அவர் விலகினார் என்பது பின்னர் தெரியவந்தது. கொரோனா பயத்தாலும், தோனிக்கு நிகராக தான் நடத்தப்படவில்லை என்பதாலும், அணி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியால் இந்தியா திரும்பியதாக தகவல்வள் வெளிவந்தன. கேப்டன் தோனி எடுத்துச்சொல்லியும் கூட, ரெய்னா அதையெல்லாம் கேட்காமல் இந்தியா திரும்பிவிட்டதாக கூறப்பட்டது.
ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், ரெய்னாவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். குடும்பம் போன்றது சிஎஸ்கே அணி; யாருக்கும் இங்கு மகிழ்ச்சியில்லை என்றாலோ, ஏதேனும் தயக்கம் என்றாலோ தாராளமாக வெளியேறலாம். சில நேரங்களில் வெற்றி தலைக்கு ஏறிவிடும் என்று ரெய்னாவை கடுமையாக விளாசியிருந்தார்.
சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவுக்கும் இடையேயான விரிசலால், இனிமேல் ரெய்னா சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்பில்லை என பேசப்பட்டது. இந்நிலையில், தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த பிரச்னையும் இல்லையென்றும், இன்னும் 4-5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியில் ஆடுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் ரெய்னா தெரிவித்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணியை விட்டு விலக விரும்பவில்லை என்ற தனது திடமான கருத்தை ரெய்னா தெரிவித்துவிட்டார்.
சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசனும், ரெய்னாவை தனது மகன் போலவே பார்ப்பதாக தெரிவித்துள்ளார். எனவே அணி நிர்வாகத்துடன் ரெய்னா சமாதானமடைந்துவிட்டதாகவே தெரிகிறது. சிஎஸ்கே கேப்டன் தோனி, தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் மற்றும் சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் ஆகியோருக்கு, மீண்டும் அணியில் இணைவது குறித்து ரெய்னா மெசேஜ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெய்னா மீண்டும் அணியில் இணைவது குறித்து என்.ஸ்ரீநிவாசன், மை கேல் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் நானே தவிர, கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன். அணி தான் எனக்கு சொந்தமே தவிர, அணியில் உள்ள வீரர்கள் அல்ல. நான் கேப்டன் கிடையாது. எங்கள் அணிக்கு நிரந்தர கேப்டன் இருக்கிறார். அவரே பார்த்துக்கொள்வார். ஏலத்தில் வீரர்கள் தேர்வு, எந்த வீரரை எடுக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்ற விஷயத்தில் எல்லாம் நான் தலையிடுவதே இல்லை. கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் நான் எப்படி தலையிட முடியும்? என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
எனவே ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவது கேப்டன் தோனியின் கையில் தான் உள்ளது.