ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட சிஎஸ்கே அணி, இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், இன்று ஆர்சிபியை எதிர்கொண்டு ஆடியது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக களத்திற்கு வந்த ஆரோன் ஃபின்ச்சும்(15), தேவ்தத் படிக்கல்லும்(22) பவர்ப்ளேயில் தங்களது பணியை சரியாக செய்து கொடுத்தனர். 6.1 ஓவரில் 46 ரன்களுக்கு ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் கோலியும் டிவில்லியர்ஸும் இணைந்து 11 ஓவரில் 82 ரன்களை சேர்த்தனர். களத்தில் செட்டில் ஆகியிருந்த டிவில்லியர்ஸை 18வது ஓவரில் 39 ரன்களில் தீபக் சாஹர் வீழ்த்த, அரைசதம் அடித்த கோலி, சரியாக 50 ரன்களில் சாம் கரன் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் ஆர்சிபி அணியை 145 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே அணி.

146 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட, சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டுப்ளெசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களத்திற்கு வந்தனர். இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் இதற்கு முன்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த போட்டியில் மிக அருமையாக ஆடினார்.

அதிரடியாக ஆடிய டுப்ளெசிஸ் 13 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் அதிரடியாக ஆடினார். கெய்க்வாட்டும் ராயுடுவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். ராயுடு 27 பந்தில் 39 ரன்களுக்கு சாஹலின் பந்தில் ஆட்டமிழக்க, பொறுப்புடனும் துணிச்சலாகவும் தெளிவாகவும் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். ராயுடு விக்கெட்டுக்கு பிறகு கெய்க்வாட்டுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைது 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி.

ருதுராஜ் கெய்க்வாட் 51 ரன்களில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கேவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.