ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. 

இதுவரை 3 முறை கோப்பையை வென்றதோடு, 7 முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய அணியான சிஎஸ்கே, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்ந்துவருகிறது. கடந்த சீசனில் கோப்பையை வென்று, நடப்பு சாம்பியன் என்ற கெத்தோடு இந்த சீசனை ஆடிவருகிறது. 

இந்த சீசனிலும் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியையும் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

சிஎஸ்கே அணி வெற்றி நடையை தொடர்ந்து வரும் நிலையில், அந்த அணி பெரிதும் நம்பியிருந்த சில வீரர்கள் இந்த சீசனில் ஆடமுடியாமல் போனது பின்னடைவுதான். தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். நிகிடி ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெருத்த அடி என்று சிஎஸ்கே கேப்டன் தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

லுங்கி நிகிடி விலகியதை தொடர்ந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியும் விலகியுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. எனவே இந்த நேரத்தில் தனது மனைவியுடனும் குடும்பத்துடனும் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் அவரும் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். 

ஏற்கனவே நிகிடி விலகியிருந்த நிலையில், டேவிட் வில்லியும் விலகியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பாதிப்புதான். எனினும் இருக்கும் வீரர்களை சிறப்பாக பயன்படுத்தும் உத்தி அறிந்தவர் தோனி. எனவே இதற்கெல்லாம் சிஎஸ்கே அணி அசராது என்பதில் சந்தேகமில்லை.