கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கியுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றவுடன், அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், அனைத்து அணிகளும் முன்கூட்டியே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. 

இன்று முதல் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தொடங்கியுள்ளன. கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன.

சிஎஸ்கே வீரர்கள் கடந்த 15ம் தேதியிலிருந்து சென்னையில் பயிற்சி முகாமில் ஈடுபட்டனர். சென்னை வந்ததுமே சிஎஸ்கே வீரர்கள், அணி நிர்வாகிகள், உதவியாளர்கள் என ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ள அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2வது முறையாக மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சிஎஸ்கே வீரர்கள், நிர்வாகத்தினர் உட்பட மொத்த 60 பேருக்கு 2வது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கேப்டன் தோனி உட்பட யாருக்குமே கொரோனா இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணி நாளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்பவுள்ள நிலையில், யாருக்குமே கொரோனா இல்லை என தெரியவந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. 

நாளை மதியம் 1.30 மணிக்கு சிஎஸ்கே அணி சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்படுகிறது. தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், 180 பேர் பயணிக்க வல்ல விமானத்தில், 60 பேர் பயணிக்கவுள்ளனர்.