முதல் ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ள 3 அணிகளில் ஒன்று டெல்லி கேபிடள்ஸ். முதல்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் வீரர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்திய அந்த அணி, ரஹானே, அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்களை அணியில் எடுத்துள்ளது. 

2018 மற்றும் 2019 ஆகிய 2 ஐபிஎல் சீசன்களிலும் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடவுள்ள நிலையில், கடந்த சீசனில் அவர் செய்த சர்ச்சைக்குரிய மன்கட் ரன் அவுட் குறித்து பாண்டிங் பேசியிருந்தார். 

கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின். பவுலர் பந்துவீசும்போது, பவுலிங் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே இருந்தால், ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்வதுதான் மன்கட் ரன் அவுட். ஐசிசி விதி 41.16ன் படி மன்கட் ரன் அவுட் செய்யமுடியும். ஆனால், அதை தார்மீக ரீதியில் பெரும்பாலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் எதிர்க்கின்றனர். 

கடந்த சீசனில் அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தபோது, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அதை எதிர்த்தனர்; அது தவறு என்று அஷ்வினுக்கு கண்டனமும் தெரிவித்தனர். ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஐசிசி விதிப்படி தான் செய்தது சரிதான் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார் அஷ்வின்.

இந்நிலையில், அஷ்வின் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், முதலில் அஷ்வினுடன் மன்கட் குறித்து பேசவுள்ளேன். கடந்த சீசனில் அஷ்வின் எங்கள் அணியில் இல்லை. அஷ்வின் மிரட்டலான பவுலர். ஐபிஎல்லில் நீண்டகாலமாக சிறப்பாக ஆடிவருகிறார். கடந்த சீசனில் அஷ்வின் மன்கட் செய்ததை பார்த்து, எனது வீரர்களிடம், இதுமாதிரி எல்லாம் நாம் செய்யக்கூடாது என்பதையும் நாம் இந்த மாதிரி கிரிக்கெட் ஆடப்போவதில்லை என்பதையும் திடமாக தெரிவித்தேன்.

இந்த முறை அஷ்வின் எங்கள் அணியில் இணைந்துள்ளதால், கண்டிப்பாக மன்கட் குறித்து அஷ்வினிடம் பேசுவேன்.  கண்டிப்பாக இது மிகவும் கடினமான உரையாடலாக அமையும். ஏனெனில் அஷ்வின், ஐசிசி விதிப்படி தான் செய்தது சரி என்றே வாதிடுவார். ஆனால் தார்மீக ரீதியில் அது சரியானது அல்ல என்பதை நான் அஷ்வினிடம் கூறுவேன். டெல்லி கேபிடள்ஸ் அணி அப்படி ஆடாது. அஷ்வின் எனது கருத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மன்கட் ரன் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் கிடையாது என்று பாண்டிங் தெரிவித்திருந்த நிலையில், பந்துவீசும் முன்பே பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறுவது மட்டும் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்டா..? என்று பிராட் ஹாக், பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.