ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஒன்று. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த 2 சீசன்களில் நன்றாக ஆடியுள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அலெக்ஸ் கேரி, ஷிம்ரான் ஹெட்மயர் ஆகிய இளம் வீரர்கள் மற்றும் ரஹானே, அஷ்வின், ஷிகர் தவான் ஆகிய அனுபவ வீரர்கள் என அனுபவமும் இளமையும் கலந்த நல்ல கலவையிலான அணியாக டெல்லி கேபிடள்ஸ் அணி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய வெற்றிகரமான ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், டெல்லி கேபிடள்ஸ் அணியின் டாப் 6 பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. அனுபவமும் இளமையும் கலந்த அணியாக அது உள்ளது. இளம் வீரரான பிரித்வி ஷாவுடன் டாப் ஆர்டரில் அனுபவ வீரரான தவான் இருக்கிறார். அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. எனவே அந்த அணி பெரிய ஸ்கோரை அடிக்கும். அஷ்வின் ஸ்பின்னர் மட்டுமல்லாது மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் மற்றும் நல்ல கேப்டனும் கூட. எனவே அஷ்வின் இருப்பது ஸ்பின் பவுலிங்கை வலுப்படுத்துவதுடன் பேட்டிங் டெப்த்துக்கும் வழிவகுக்கும். 

ஆனால் அந்த அணியின் மிகப்பெரிய பிரச்னை, ஃபாஸ்ட் பவுலிங் டெப்த் இல்லாததுதான். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு அதிகமாக ரபாடாவை மட்டுமே சார்ந்துள்ளது அந்த அணி. அவர் காயமடைந்துவிட்டால், டெல்லி கேபிடள்ஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும். மன்கட் விவகாரத்தில் பாண்டிங் மற்றும் அஷ்வின் இடையே நல்லுறவு மலர வேண்டும். டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் 7ம் இடத்தை பிடிக்கும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

மன்கட் ரன் அவுட் செய்வது ஆட்டத்தின் ஸ்பிரிட்டை பாதிக்கும் என்றும் இதுகுறித்து அஷ்வினிடம் பேசுவேன் என்றும் மன்கட்டுக்கு எதிரான கருத்தை பாண்டிங் தெரிவித்திருந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் செய்வது மட்டும் சரியா என்று, பாண்டிங்கிற்கு பதிலடி கொடுக்கு வகையில், ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த பிராட் ஹாக், இப்போது, மீண்டும் பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேப்டள்ஸ் அணி 7ம் இடத்தை பிடிக்கும் என சீண்டியுள்ளார்.