ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று, வெற்றிகரமான அணியாக கோலோச்சுகிறது. கடந்த முறை டைட்டிலை வென்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, க்ருணல் பாண்டியா, மலிங்கா என கோர் டீம் வலுவாக இருப்பதுதான் அந்த அணி ஐபிஎல்லில் கோலோச்ச முக்கியமான காரணம். இந்த சீசனில் மலிங்கா ஆடவில்லை. அவர் ஆடவில்லையென்றாலும், அந்த அணிக்கு பாதிப்பில்லாத அளவிற்கு வலுவான வீரர்களை பெற்றுள்ளது. 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசியுள்ள பிராட் ஹாக், மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும்போலவே டாப் 4ல் இடம்பெறும். இறுதி போட்டிக்கு போகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மும்பை இந்தியன்ஸில் அதிகமான ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். நல்ல ஸ்பின்னர்களும் உள்ளார்கள். இந்த சீசனில் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. அந்த அணிக்கு இருக்கும் ஒரே சிக்கல், அணி காம்பினேஷனை தேர்வு செய்வதுதான். ஆடும் லெவனில் எந்த 4 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது என்பதுதான் பிரச்னை. சூர்யகுமார் யாதவ் தரமான பேட்ஸ்மேன். அவர் இந்த சீசனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைப்பதாக பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

குயிண்டன் டி காக் தொடக்க வீரராக இறங்குவார். கிறிஸ் லின்னையும் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. மேலும் பொல்லார்டு, நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட் ஆகியோரும் உள்ளனர்.