ஐபிஎல்லில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் டைட்டிலை வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கேகேஆர் அணி திகழ்கிறது. 2 முறை கேகேஆருக்கு கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், 2018 சீசனில் அந்த அணியிலிருந்து விலகினார். இதையடுத்து 2018ம் ஆண்டு தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் கேகேஆர் அணி பெரியளவில் ஒன்றையும் சாதிக்கவில்லை. 2018ல் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற கேகேஆர் அணி, 2019ல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் பலரை பெற்றிருந்தும் அந்த அணி கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறவில்லை.

கடந்த சீசனில் தனி ஒருவனாக பல போட்டிகளில் அருமையாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார் ஆண்ட்ரே ரசல். குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக அசாத்திய இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் பின்வரிசையில் பேட்டிங் ஆடவந்த ரசல், வெறும் 19 பந்தில் 49 ரன்களை குவித்து கேகேஆரை வெற்றி பெற செய்தார். 

ஆண்ட்ரே ரசல் கடந்த சீசனில் செம ஃபார்மில் தெறிக்கவிட்ட போதிலும், அவர் முன்வரிசையில்(3அல்லது4) இறக்கப்படவில்லை. அதனால் பல போட்டிகளில் அவர் அதிரடியாக ஆடி கடுமையாக போராடியபோதிலும் கேகேஆர் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. ரசலை முன்வரிசையில் இறக்கியிருந்தால் கண்டிப்பாக கேகேஆர் அணி நிறைய வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு சென்றிருக்கும். இது கடந்த சீசனில் பெரும் பிரச்னையாகவே வெடித்தது. ரசல் பின்வரிசையில் இறங்கியபோதிலும், கடந்த சீசனில் 510 ரன்களை குவித்தார்.

ரசல் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியபோதிலும், அவரை முன்வரிசையில் இறக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கை, சாதாரண பேட்டிங் ஆர்டரை கொண்ட ராஜஸ்தான் அணியை அடிக்கவிடாமல் தடுக்க, கேகேஆர் அணியால் முடியவில்லை. அதனால் கடும் அதிருப்தியடைந்த ரசல், ”எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் தவறான முடிவுகளை எடுத்தால் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கேப்டன் தினேஷ் கார்த்திக்கைத்தான் சாடினார் என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த சீசனில் லீக் சுற்றிலேயே கேகேஆர் வெளியேறிய நிலையில், இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் ஃப்ரெஷ்ஷாக களமிறங்கவுள்ளது. இந்த சீசனில் பிரண்டன் மெக்கல்லம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான மனக்கசப்பை தீர்த்துவைத்து, அணியில் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் பிரண்டன் மெக்கல்லம் இருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் கேகேஆர் அணி ஸ்பின்னரான பிராட் ஹாக், கேகேஆர் அணியில் ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நல்லுறவு இல்லாதது ஒன்றுதான் அந்த அணியின் பிரச்னை. அவர்களுக்கு இடையே சிக்கலை தீர்த்து நல்லுறவை உறுதி செய்ய வேண்டியது பிரண்டன் மெக்கல்லத்தின் கடமை என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.