Asianet News TamilAsianet News Tamil

பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்; சாம்சன் அரைசதம்..! சாம்பியன் அணியான MIஐ ஊதித்தள்ளிய ராஜஸ்தான்

மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 196 ரன்களை பென் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்தால் எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

ben stokes century lead rajasthan royals comfortable win against mumbai indians in ipl 2020
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 25, 2020, 11:21 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்தது. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடாததால், பொல்லார்டு தான் கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற பொல்லார்டு பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்களாக டி காக்கும் இஷான் கிஷனும் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் பறக்கவிட்ட டி காக், அதற்கடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அதிரடியாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் இணைந்து 10 ஓவரில் 83 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 37 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த பொல்லார்டு 6 ரன்களுக்கு 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர், சவுரப் திவாரியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். சவுரப் திவாரி தனது பணியை செவ்வனே செய்தார். 25 பந்தில் 34 ரன்கள் அடித்து திவாரி ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா பொளந்து கட்டிவிட்டார். அங்கித் ராஜ்பூத் வீசிய 18வது ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டது. 19வது ஓவரை ஆர்ச்சர் அருமையாக வீசி, ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை ஹர்திக் பாண்டியா விளாச, கடைசி ஓவரிலும் 27 ரன்கள் கிடைத்தது. 18 மற்றும் 20 ஆகிய 2 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 60 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியாவின் காட்டடியால் 20 ஓவரில் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.

196 ரன்கள் என்ற கடினமான இலக்கை, அதுவும் பும்ரா, டிரெண்ட் போல்ட், பாட்டின்சன் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தொடக்கம் முதலே அடித்து ஆடிய பென் ஸ்டோக்ஸ், மும்பை இந்தியன்ஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கி சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்தார். இப்படியொரு இன்னிங்ஸை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இதுவரை ஒரு வீரர் ஆடியதில்லை. அப்படியொரு அதிரடி இன்னிங்ஸை ஆடினார் ஸ்டோக்ஸ்.

ராபின் உத்தப்பா 13 ரன்களிலும் கேப்டன் ஸ்மித் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் சஞ்சு சாம்சனும் இணைந்து மும்பை இந்தியன்ஸின் பவுலிங்கை பொளந்துகட்டினர். ஸ்டோக்ஸின் அதிரடியால், ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஓவருக்கு 10 ரன்ரேட்டை தொடர்ந்தது. சாம்சனும், ஸ்டோஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பார்ட்னர்ஷிப் அமைத்த அதேவேளையில் அடித்தும் ஆடினார். ஸ்டோக்ஸ் ஒருமுனையில் அடித்து ஆட, மறுமுனையில் சாம்சனும் அடித்து ஆடியதால், ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

பும்ரா, போல்ட், பாட்டின்சன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பவுலர்களின் பவுலிங்கை பொளந்துகட்டினார் ஸ்டோக்ஸ். அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். ஸ்டோக்ஸ் 60 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 107 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்தார். இவர்களின் அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாமிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios