ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு, அனைத்து அணிகளும் கடந்த மாதம் 20-22 தேதிகளில் அங்கு சென்றுவிட்டன. அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இதில், சிஎஸ்கே அணி வீரர்களான தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணியை சேர்ந்த மற்ற சிலர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்களது தனிமைப்படுத்தல் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம் பயிற்சியை தொடங்கிவிட்டன. 

ஆனாலும் அனைத்து அணியினருக்கும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நிறைய பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தால், ஐபிஎல் நடப்பது சந்தேகமாகிவிடும். சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேரை தொடர்ந்து, பிசிசிஐ அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிசிசிஐ அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை ஐபிஎல் நிர்வாகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ அதிகாரிக்கே கொரோனா உறுதியாகியிருப்பது, மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.