ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை ஐபிஎல் சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த சீசனிலும் சிறப்பாக ஆடிவருகின்றன. 

சிஎஸ்கே 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3வது இடங்களிலும் உள்ளன. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்து வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்துவந்த சன்ரைசர்ஸ் அணி, கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றதன் மூலம் நான்காமிடத்தை பிடித்துள்ளது. 

கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வார்னர் திரும்பிவந்ததும், பேர்ஸ்டோ அணியில் இணைந்ததும் கூடுதல் பலம். சன்ரைசர்ஸ் அணியின் பெரும்பாலான வெற்றிகளுக்கு வார்னர் - பேர்ஸ்டோ ஜோடியின் அபாரமான தொடக்கமே காரணம். 

இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னர் முதலிடத்திலும் பேர்ஸ்டோ இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அந்த அணி அடித்த ஸ்கோரில் சுமார் 70-75 சதவிகிதம் ரன்கள் இவர்கள் அடித்ததுதான். பேட்டிங்கில் அந்த அணி இவர்கள் இருவரையும் சார்ந்துதான் உள்ளது. 

உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி, தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அந்த தொடரில் ஆடுவதற்காக பேர்ஸ்டோ இங்கிலாந்து செல்ல உள்ளார். ஐபிஎல்லில் பாதியில் விலகி நாடு திரும்ப உள்ளார். அது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய இழப்பு. 

நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேசிய பேர்ஸ்டோ, தான் இங்கிலாந்துக்கு செல்வதற்குள் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதை உறுதி செய்துவிட்டுத்தான் செல்வேன் என்று உறுதி பூண்டிருந்தார். 

அதேபோலவே கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 80 ரன்கள் அடித்து 15வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற செய்தார். இதையடுத்து நாளை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியுடன் நாடு திரும்புகிறார். சொன்னதை போலவே கேகேஆர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி, தான் வாய்ச்சொல் வீரனல்ல; செயல் வீரன் என்று நிரூபித்து காட்டியுள்ளார் பேர்ஸ்டோ. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி தான் பேர்ஸ்டோ இந்த சீசனில் ஆடும் கடைசி போட்டி என்பதால் அதிலும் வெளுத்துவிட்டுத்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.