ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் கேகேஆர் அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்தி, 2 வெற்றிகளுடன் டெல்லி கேபிடள்ஸ் அணியை எதிர்கொண்டது கேகேஆர் அணி. கேகேஆர் அணியின் வெற்றிக்கு முதல் இரண்டு போட்டிகளிலும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல். 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார். கேகேஆர் அணி நேற்றைய போட்டியில் 61 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 10 ஓவர் முடிவில் வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்னர் ஆண்ட்ரே ரசலும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துதான் கேகேஆர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 

ரசல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், 14வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல், அந்த ஓவரின் நான்காவது பந்தை ஃபுல் டாஸாக நேரடியாக ரசலின் தோள்பட்டைக்கு வீசினார். அந்த பந்தில் ரசலுக்கு தோள்பட்டையில் பலத்த அடிபட்டது. அதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதோடு, சில நிமிடங்கள் ரசலால் நார்மலாக ஆட முடியவில்லை; வலியால் அவ்வப்போது துடித்தார். எனினும் வலியை பொருட்படுத்தாமல் அதை மறைத்துவிட்டு, அதிரடியை தொடர்ந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரசல், ஹர்ஷல் படேல் வீசிய 16வது ஓவரில் இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். 16வது ஓவரின் கடைசி பந்தில் அடித்த ஷாட் அபாரமானது. 

தோள்பட்டை காயத்திற்கு பிறகும் ஸ்டேடியத்திற்கு வெளியே பந்தை அனுப்புமளவிற்கு ஷாட் அடிக்க முடியும் என்றால் அது ரசலால்தான் முடியும். 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் ரசல். அரைசதம் அடித்த பிறகு அடிபட்ட இடது கையிலேயே பேட்டை உயர்த்தி கெத்து காட்டினார் ரசல். கேகேஆர் அணியின் வெற்றி நாயகனாக திகழ்ந்துவருகிறார்.