ஐபிஎல் 14வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 வெளிநாட்டு வீரர்களை கழட்டிவிட்டே தீர வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசனில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் தலைமையில் மிகச்சிறப்பாக ஆடியபோதிலும், ஆரம்பத்தில் நூலிழையில் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்ததன் விளைவாக, பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது.

பஞ்சாப் அணியில் ராகுல், மயன்க் அகர்வால், ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகிய இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். வெளிநாட்டு வீரர்களில் கெய்லும் பூரானும் மட்டுமே நன்றாக ஆடினர். பெரும் எதிர்பார்ப்புடன் பத்தே முக்கால் கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்த மேக்ஸ்வெல், எட்டரை கோடிக்கு எடுத்த ஷெல்டான் கோட்ரெல் ஆகியோர் சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல்லும் கோட்ரெலும் எந்தவிதமான பங்களிப்பையும் பஞ்சாப் அணிக்கு செய்யவில்லை. ஹார்டஸுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

எனவே அவர்கள் மூவரையும் அடுத்த சீசனில் கழற்றிவிட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.