ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று ஆறு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதே நிலையில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது சிஎஸ்கே. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் களம் காண்கின்றன.

ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது சந்தேகமாகியுள்ளது. 

இந்த சீசனில் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடாததாலும், சீசனின் ஆரம்பத்தில் பிராவோ, ராயுடு காயமடைந்ததால் அவர்களும் இல்லாததால் சில போட்டிகளில் அணி காம்பினேஷன் வலுவாக இல்லாததால் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே அணி.

வழக்கமாக வலுவான அணி காம்பினேஷனை பெற்றிருக்கும் சிஎஸ்கே அணியில், இந்த சீசனில் அந்த அணியின் வீரர்கள் தேர்வு விவாதத்திற்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. குறிப்பாக கேதர் ஜாதவின் தேர்வு. பேட்டிங் ஆட பெரும்பாலும் வாய்ப்பே கிடைப்பதில்லை; அப்படி கிடைத்தாலும் அதில் அவர் சரியாக ஆடுவதில்லை. பவுலிங்கும் வீசுவதில்லை. பிறகு அவர் எதற்குத்தான் அணியில்? என்ற விமர்சனமும் கேள்வியும் எழுந்த நிலையில் இடையில் ஓரங்கட்டப்பட்ட அவர், சன்ரைசர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியிலும் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் கேதர் ஜாதவ் ஆடுவாரா என்ற கேள்வி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பிராவோ ஆடாததால், அவரது இடத்தில் என்னை பொறுத்தவரை ஹேசில்வுட்டை இறக்கலாம். சிஎஸ்கே கேதர் ஜாதவை ஏன் ஆடவைக்கிறது? ஒருவேளை அவர் கண்டிப்பாக ஆடவேண்டும் என்றால், அவரது பேட்டிங் ஆர்டரை உறுதி செய்ய வேண்டும். எந்த வரிசையில் கேதர் ஜாதவை இறக்கப்போகிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 
கேதர் ஜாதவ் இந்த சீசனில் வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்புகள் கிடைத்தும், அதை செய்ய தவறினார் கேதர் ஜாதவ்.