உத்தரபிரதேசத்தில் சப்பாத்தி செய்ய மறுத்த மனைவி கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோதுமை மாவு இல்லாததால் பருப்பு சார்ந்த உணவை சமைத்த மனைவியிடம், சப்பாத்தி கேட்ட கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், சப்பாத்தி செய்ய மறுத்த மனைவி தனது கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

மகாவீர் அஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (28) என்பவருக்கும், அவரது மனைவி தேவி என்பவருக்கும் இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சம்பவம் நடந்த இரவு, வீட்டில் கோதுமை மாவு இல்லாததால், தேவி வேறு உணவு சமைத்துள்ளார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த சஞ்சய், சப்பாத்தி செய்து தருமாறு தன் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தேவி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சஞ்சயை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால், அலறிய சஞ்சய் கீழே விழுந்துள்ளார்.

சஞ்சய்யின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.