அகமதாபாத்தில் உள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவர் 10-ஆம் வகுப்பு மாணவரைக் கத்தியால் குத்திக் கொன்றார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அகமதாபாத்தில் உள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவர் 10-ஆம் வகுப்பு மாணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்தது என்ன?

செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து, 10-ஆம் வகுப்பு மாணவர் நயன் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஜூனியர் மாணவர் ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ஜூனியர் மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் காயமடைந்த நயன், தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் திரும்ப ஓடி வந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உடனடியாக, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த செய்தி பரவியதும், நயனின் பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் பள்ளியின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த சிலர், பள்ளியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், பள்ளி ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.

அமைச்சர் கருத்து

இந்த சம்பவம் குறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் பிரபுல் பன்சேரியா வருத்தம் தெரிவித்தார். அவர், நயனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், போராட்டக்காரர்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். மேலும், மாணவர்களிடையே அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும், இதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் வன்முறை நிறைந்த விளையாட்டுகளும் ஒரு காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தாக்கிய சிறுவன் கைது

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஜூனியர் மாணவரைக் கைது செய்தது. மேலும், பள்ளி வளாகத்தின் சிசிடிவி காட்சிகளைப் பெற்று, விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.