- Home
- Tamil Nadu News
- சென்னையில் அதிர்ச்சி! கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொடூர கொலை! திமுக முக்கிய பிரமுகரின் பேரன் கைது!
சென்னையில் அதிர்ச்சி! கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொடூர கொலை! திமுக முக்கிய பிரமுகரின் பேரன் கைது!
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஒரு மாணவர் காரில் மோதப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொலைக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் பி.இ. கோவில் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (20). கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நித்தின் சாய் (19). சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். அதேபோல் சந்துரு, எட்வின், சுதன், பிரணவ் ஆகிய 4 பேரும் கல்லூரி மாணவர்கள். இந்நிலையில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை, வெங்கடேஷ் ஒரு தலையாக காதலித்து வந்தது மட்டுமல்லாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
இவரது தொல்லை தாங்காத அந்த மாணவி இதுதொடர்பாக பிரணவிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பிரணவ் தனது நண்பர் சந்துரு என்பவரிடம் தெரிவித்துள்ளார். இவர், திமுக கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன். பிறகு இருவரும் செல்போன் மூலம் வெங்கடேஷை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதுபற்றி வெங்கடேஷ் தனது நண்பர் நித்தின் சாய் மற்றும் அபிஷேக்கிடம் கூறியுள்ளார். உடனே பிரணவுக்கு போன் செய்து நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் நித்தின்சாய் மற்றும் அபிஷேக் நண்பரான மோகன் என்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது அங்கு வந்த சந்துரு, பிரணவ், எட்வின், சுதன் ஆகியோர் சொகுசு காரில் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேஷுக்கு ஆதரவாக சண்டை போட்ட நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர் சொகுசு கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். ஹோட்டல் சண்டை முடிந்த பின்னர் நிதின்சாய், அபிஷேக் இருவரும் ஹோண்டா ஆக்டிவாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சொகுசு காரில் வேகமாக வந்த நித்தின் சாய், பிரணவ், சுதன் ஆகியோர் தூரத்தினர். இதை பார்த்ததும் அபிஷேக் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். இருப்பினும் சொகுசு கார், அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் நித்தின் சாய், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அபிஷேக் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து பிரணவ், அவரது நண்பர்கள் சுதன் மற்றும் கே.கே.நகர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான தனசேகரனின் பேரன் சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்தின் மற்றும் அவரது நண்பர்கள் கல்லை எடுத்து எங்களை தாக்க முயன்றனர். கல்லால் தாக்க வந்ததால் அதிவேகமாக காரை எடுத்தபோது பைக் மீது மோதி விபத்து என காரை ஏற்றி கல்லூரி மாணவர் நித்தின் சாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த சந்துரு வாக்குமூலம் அளித்துள்ளார்.