மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த மாற்றம் ஆணையத்தின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசை கடுமையாகச் சாடினார். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை (CJI) நீக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கும் மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவில், பிரதமர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன், இதற்கு முன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தார். ஆனால், 2023ஆம் ஆண்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு மத்திய அமைச்சரவை அமைச்சர் அந்தக் குழுவில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சட்டத்தை நோக்கியே ராகுல் காந்தி தன் கேள்விகளைத் தொடுத்தார்.

தலைமை நீதிபதி மீது நம்பிக்கை இல்லையா?

"தேர்வு குழுவில் இருந்து தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார்? நமக்கு தலைமை நீதிபதி மீது நம்பிக்கை இல்லையா?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

மேலும், தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தேர்வுக் குழுவில் அங்கம் வகித்தாலும், அங்கே தமக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ஏனெனில், அந்தக் குழுவில் ஒருபுறம் பிரதமர் மோடியும், மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருப்பதால், தாம் பெரும்பான்மை பலத்தால் ஒடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"தலைமை நீதிபதி ஏன் தேர்வுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்? அதற்கான நோக்கம் என்ன? அந்தக் குழுவில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை," என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையர்களுக்குப் பாதுகாப்பு

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கும் விதமாக, "தேர்தல் ஆணையர், தாம் வகிக்கும் பதவியின்போது எடுக்கும் முடிவுகளுக்காகத் தண்டிக்கப்படக் கூடாது" என்று உறுதிப்படுத்தும் மற்றொரு சட்டம் ஏன் நிறைவேற்றப்பட்டது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

சட்டத்தின் பிரிவு 16 குறித்து விமர்சித்த ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையச் சட்டம் 2023-இன் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், அவர்கள் பதவியில் இருக்கும்போது எடுத்த முடிவுகளால் எழும் எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.

இந்தச் சட்டத்தின் மூலம், தேர்தல் ஆணையத்தின் தலைவரைத் கட்டுப்படுத்தும் மத்திய அரசு அதன் மூலம் என்ன செய்கிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். தேர்தல் தேதிகள் அனைத்தும் பிரதமரின் பிரச்சார அட்டவணைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.