இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கும் மரபை மத்திய அரசு மீறுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரும் வெளியுறவு அமைச்சகமும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த மரபைப் புறக்கணிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தூதுக்குழுக்கள் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கும் மரபினை மத்திய அரசு மீறுவதாகக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டுத் தலைவர்கள் 'எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கக் கூடாது' என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கத் தடை
ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுவாக, இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கும் மரபு இருந்தது. இது வாஜ்பாய் அரசாங்கத்திலும், மன்மோகன் சிங் அரசாங்கத்திலும் நடந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை." என்று கூறினார்.
"நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று தூதரகங்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள். 'எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது' என வெளிநாட்டுப் பிரமுகர்களே எங்களிடம் கூறினர்," என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சகமும், அவர்களின் 'பாதுகாப்பின்மை' காரணமாகவே இந்த மரபைப் புறக்கணிப்பதாகக் கூறினார்.
"எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது கண்ணோட்டத்தை வழங்குவார்; நாங்களும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஆனால், அரசாங்கம் நாங்கள் வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்திப்பதை விரும்பவில்லை. பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சகமும் இப்போது அவர்களின் பாதுகாப்பின்மை காரணமாக இதைப் பின்பற்றுவதில்லை," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி வத்ராவும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசை விமர்சித்தார். யாரும் தங்கள் குரலை எழுப்பவோ அல்லது கருத்தைத் தெரிவிக்கவோ அரசாங்கம் விரும்புவதில்லை என்று அவர் கூறினார்.
"இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. வருகை தரும் அனைத்து பிரமுகர்களும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பார்கள். அதுதான் மரபு. அந்த மரபையே அரசாங்கம் மாற்றியமைக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு ஜனநாயகத்தின் மரபுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரியங்கா காந்தி, “எதைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று கடவுளுக்கே வெளிச்சம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புடின் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பாரா?
இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் இந்தியப் பயணமாக இன்று படெல்லிக்கு வரவுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்ய அதிபரின் பயணத் திட்டத்தில் அத்தகைய சந்திப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.


