பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல பிரதேசத்தில் ரூ. 5,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தான் பிரதமரான பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாகவும், முந்தைய அரசுகள் இப்பகுதியைப் புறக்கணித்ததாகவும் சாடினார்.

தான் பிரதமராக பதவியேற்ற பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் 800 முறைகளுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சென்ற மோடி அங்கு ரூ. 5,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, மாநிலத்தின் விருந்தோம்பலையும், வளமான கலாச்சாரத்தையும் பாராட்டினார். அருணாச்சலப் பிரதேசம் தேசபக்தி மற்றும் எளிமையின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கல்விப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள், மக்களின் சேமிப்பை அதிகரிக்கும் "சேமிப்பு திருவிழா" என்றும் அவர் கூறினார்.

Scroll to load tweet…

முந்தைய அரசுகள் மீது குற்றச்சாட்டு

முந்தைய அரசுகள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஆனால், தனது அரசு அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், இப்பகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

“காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு மத்திய அமைச்சர் வடகிழக்கு மாநிலத்திற்குச் செல்வது அரிதான ஒன்று, அப்படியே சென்றாலும் 2-3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வார்கள். ஆனால், எங்கள் ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் 800-க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். எங்கள் அமைச்சர்கள் செல்லும்போது, தொலைதூர மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லவே முயற்சி செய்கிறார்கள். ஒரு பிரதமராக, நான் வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறைக்கு மேல் வந்துள்ளேன்" என மோடி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், பிரதமர் மோடி இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தவாங்கில் அமையவுள்ள நவீன மாநாட்டு மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் மாநிலத்தின் இணைப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தை, தேசிய வளர்ச்சியின் ஒரு அங்கமாக இணைக்க இந்தத் திட்டங்கள் உதவும் என்றும் பிரதமர் கூறினார்.