சிறு, குறு தொழில்கள் உள்நாட்டில் பொருட்களை தயாரிக்க வேண்டும். நாட்டு மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ஜிஎஸ்டியில் மத்திய அரசு அண்மையில் பெரும் சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. அதாவது ஜிஎஸ்டி இனிமேல் 5% மற்றும் 18% மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை நாளை முதல் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும். ஜிஎஸ்டி குறைப்பால் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். வருமான வரிச்சலுகை மற்றும் ஜிஎஸ்டி குறைப்பால் இந்த ஆண்டு இந்தியாவில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவில் செலவுகள் குறையும்'' என்றார்.
உள்நாட்டு பொருளை வாங்குங்க பிரதமர் மோடி
தொடர்ந்து பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ''சிறு, குறு தொழில்கள் மக்கள் பயன்படும் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். உள்நாட்டிலேயே சிறந்த தரத்தில் பொருட்களை தயாரிக்க வேண்டும். இந்த பொருட்கள் சர்வதேச அளவில் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் கைகொடுத்த சுதேசி கொள்கை இந்தியாவை வலுவாக உருவாக்க பயன்படும். நாட்டு மக்கள் உள்நாட்டு பொருட்களை வாங்கி கர்வத்தோடு பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
