மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சினிமா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது.
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது (2023) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று, தலைநகர் டெல்லியில் நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் தடம் பதித்து வரும் மோகன்லால், இதுவரை 350-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பன்முக திறமைதான் அவரை தென்னிந்திய சினிமாவின் உச்ச நிலைக்கு கொண்டு சென்றது.

இந்த சாதனைக்காக மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். X தளத்தில் பகிர்ந்த செய்தியில், “மோகன்லால் அவர்களின் திறமை, பன்முகத்தன்மை மற்றும் சினிமா, நாடகத் துறைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். அவரது பயணம், மலையாள சினிமாவை உலக அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. கேரளாவின் பண்பாட்டோடு அவர் கொண்டுள்ள ஆழ்ந்த தொடர்பு, அவரது படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமும் மோகன்லாலைப் பாராட்டி, “அவரின் நடிப்பு மட்டுமல்ல, இயக்கம், எழுத்து மற்றும் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் அவர் அளித்த பங்களிப்புகள் சினிமாவுக்கு அழியாத அடையாளம். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஊக்கமாக உள்ளார். இந்த விருது, அவரது கடின உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த நியாயமான அங்கீகாரம்” என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு, 2022-க்கான தாதாசாகப் பால்கே விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. இந்த முறை மோகன்லால் தேர்வு செய்யப்பட்டிருப்பது, தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரும் பெருமையாகக் கருதப்படுகிறது.
நடிகர் மோகன்லால் சினிமா உலகத்துக்கு அப்பாற்பட்டும், ராணுவத்திலும் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தாதாசாகப் பால்கே விருது அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
