பிரதமர் மோடி, 'அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்' நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள், 'பச்சத் உத்சவ்' உடன் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
‘அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்’ (Next-Generation GST reforms) நாளை முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஜிஎஸ்டியில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் எனவும் வணிகத்தை எளிதாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்:
பிரதமர் மோடி தனது உரையில், "அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தங்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் துரிதப்படுத்தும், வணிகத்தை எளிதாக்கும், முதலீடுகளைக் கவரும், மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் போட்டியில் சம பங்காளியாக மாற உதவும்," என்று கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிஎஸ்டி சட்டம்:
ஜிஎஸ்டி சட்டத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் என்று வர்ணித்த பிரதமர், "இந்தியா 2017-ல் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைத் தொடங்கியபோது, அது ஒரு பழைய வரலாற்றை மாற்றி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும் தொடக்கமாக அமைந்தது. பல தசாப்தங்களாக, நமது நாட்டின் மக்களும் வணிகர்களும் பல்வேறு வரிகளின் வலையில் சிக்கித் தவித்தனர். நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, வாட், சேவை வரி என டஜன் கணக்கான வரிகள் நம் நாட்டில் இருந்தன. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்ப, எண்ணற்ற சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நிலை ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாறியது," என்று தெரிவித்தார்.
நவராத்திரியின் முதல் நாள்:
நவராத்திரி விழா நாளை முதல் தொடங்குவதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், "நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாள் முதல், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. நாளை, நவராத்திரியின் முதல் நாள், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும்" என்று கூறினார்.
