- Home
- உலகம்
- எனக்கு நோபல் பரிசு தரணும்.. அடம்பிடிக்கும் டிரம்ப்! இந்தியா-பாக் போரை நிறுத்தியதாகவும் பேச்சு!
எனக்கு நோபல் பரிசு தரணும்.. அடம்பிடிக்கும் டிரம்ப்! இந்தியா-பாக் போரை நிறுத்தியதாகவும் பேச்சு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை வர்த்தகத்தின் மூலம் நிறுத்தியதாகக் கூறி, தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாகவும், ஏழு போர்களை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் கூறியுள்ளார்.
அமெரிக்க கார்னர்ஸ்டோன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இரவு விருந்தில் பேசிய டிரம்ப், "உலக அரங்கில், மீண்டும் ஒருமுறை நமக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை. அமைதி ஒப்பந்தங்களை உருவாக்கி, போர்களை நிறுத்தி வருகிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நடந்த போர்களை நிறுத்தினோம்" என்று தெரிவித்தார்.
போரை நிறுத்த வர்த்தகமே காரணம்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பேசிய டிரம்ப், "இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதை நான் எப்படி நிறுத்தினேன் தெரியுமா? வர்த்தகத்தின் மூலம். அவர்களுக்கு வர்த்தகம் தேவைப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்கள் மீதும் எனக்கு பெரும் மரியாதை உண்டு." என்று கூறினார்.
"இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய அனைத்து போர்களையும் நாங்கள் நிறுத்தினோம். அவற்றில் 60 சதவீத போர்கள் வர்த்தகத்தின் காரணமாகவே நிறுத்தப்பட்டன," என்றும் அவர் உரிமை கோரினார்.
இந்தியாவுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
இந்தியா குறித்து டிரம்ப், "இந்தியாவிடம் நான், 'பாருங்கள், நீங்கள் சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம். ஏனென்றால், உங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன' என்று சொன்னேன். அவர்கள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டார்கள்," என்று கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தால், நோபல் பரிசு கிடைக்கும் என்று தனக்கு கூறப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். "நான், 'ஏழு போர்கள் பற்றி என்ன? ஒவ்வொன்றுக்கும் எனக்கு ஒரு நோபல் பரிசு கிடைக்க வேண்டும்' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் ரஷ்யா-உக்ரைன் மோதலை நிறுத்தினால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்றார்கள்.
எப்படியாவது போரை நிறுத்துவோம்
ரஷ்ய அதிபர் புடினுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் மோதலை தீர்ப்பது எளிதாக இருக்கும் என தான் நினைத்ததாகவும், ஆனால் அது எளிதாக இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். "நாங்கள் எப்படியாவது போரை முடித்து வைப்போம்," என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு மாறாக போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் கூறிவருகிறார்.