நான் ரொம்ப மோசமானவன்.. கெட்ட விஷயமா நடக்கப் போகுது.. தாலிபனுக்கு டிரம்ப் வார்னிங்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தளம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கெட்ட விஷயங்கள் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
"பாகிராம் விமானப்படை தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்!!!" என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிராம் விமானப்படை தளம்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அது (பாகிராம் விமானப்படை தளம்) திரும்ப வேண்டும், விரைவில் திரும்பக் கிடைக்க வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை என்றால், நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்," என மிரட்டல் தொனியில் பேசினார்.
பாகிராம் தளத்தை மீண்டும் பெற படைகளை அனுப்பும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதைப் பற்றி இப்போது பேச மாட்டோம். ஆனால் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்" என டிரம்ப் பதிலளித்தார்.
#WATCH | On Bagram Airbase in Afghanistan, US President Donald J Trump says, "We're talking now to Afghanistan, and we want it back, and we want it back soon. If they don't do it, you're going to find out what I'm going to do."
(Source: US Network Pool via Reuters) pic.twitter.com/nje7BJwSXQ— ANI (@ANI) September 21, 2025
ஆப்கனில் மிகப்பெரிய விமானப்படை தளம்
பாகிராம் விமானப்படைத் தளம் ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய விமானப்படை தளமாகும். அமெரிக்கா தலைமையிலான படைகள் தாலிபன்களுக்கு எதிராக நடத்திய போரில், இந்தத் தளம் ஒரு முக்கிய மையமாக இருந்தது. இந்தத் தளத்தில் அமெரிக்கப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிராம் விமானப்படை தளத்தின் முக்கியத்துவம்
இந்தத் தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால், அதை அமெரிக்கா இழந்தது குறித்து டிரம்ப் பலமுறை வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாகிராம் தளத்தை மீண்டும் பெற அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் முதன்முறையாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அதைத் திரும்பப் பெற முயற்சிக்கிறோம், ஏனென்றால் அவர்களுக்கு எங்களிடமிருந்து சில விஷயங்கள் தேவைப்படுகின்றன," என்று பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
ஜோ பைடன் எடுத்த முடிவின் விளைவு
டிரம்ப் தலைமையிலான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2021 ஜூலை மாதம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பாகிராம் தளத்திலிருந்து திடீரென வெளியேறின. அதன் பின்னர், தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர்.
டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றியது குறித்து ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், ஆப்கானிஸ்தானில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.