Asianet News TamilAsianet News Tamil

இந்து மாணவிகளும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம்? அரசு தீவிர விசாரணை

மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.

School management forced Hindu girls to wear hijab? The government is actively investigating
Author
First Published Jun 1, 2023, 8:53 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில், இந்து மாணவிகள் உட்பட பெண்கள் ஹிஜாப் போல தலையில் முக்காடு அணிந்திருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் மாணவிகள், ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “ ஹிஜாப் புகார் தொடர்பாக, முதலில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இது குறித்து முழுமையாக விசாரிக்க, காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையும் படிங்க : மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த நாடகம் புதிய நாடாளுமன்றம், செங்கோல் ; ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம்!

இதனிடையே, இந்து மாணவிகளை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியின் பதிவை ரத்து செய்யக் கோரி அவர்கள் மனு அளித்தனர். எனினும் மத மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அது உண்மையென கண்டறியப்படவில்லை என்றும் தாமோ மாவட்ட ஆட்சியர் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் “ இந்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.  உள்துறை அமைச்சரின் உத்தரவுக்கு பின், தாசில்தார், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி உரிமையாளர் முஸ்டாக் கான், பள்ளியில் யாரையும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனூனாகோ இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சீருடை என்ற பெயரில் இந்து மற்றும் பிற முஸ்லிம் அல்லாத சிறுமிகளை பர்தா மற்றும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவது குறித்து புகார் வந்துள்ளது..  தேவையான நடவடிக்கைக்காக தாமோ கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு வருகிறது” தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, கர்நாடகாவில் உள்ள, உடுப்பியில் உள்ள ஒரு அரசு பியூசி  கல்லூரி வகுப்பறைகளுக்குள் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாத பொருளானது. இதை தொடர்ந்து கர்நாடகாவின் அப்போதைய பாஜக அரசு, கல்லூரி வளாகங்களுக்குள் ஹிஜாப் அணிவதை தடை செய்தது. சில முஸ்லீம் மாணவிகள் நீதிமன்றத்தை நாடியதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காங்கிரஸ் பார்முலா நாட்டையே திவால் ஆக்கிவிடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

Follow Us:
Download App:
  • android
  • ios