மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த நாடகம் புதிய நாடாளுமன்றம், செங்கோல் ; ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில் கடுமையாக விமர்சித்து இருப்பதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவில் இந்த முறை புதிய நாடாளுமன்றத்தையும், புனிதமான செங்கோலையும் அவமதித்துள்ளார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதன்கிழமை, சான்பிரான்சிஸ்கோவில் 'மொஹபத் கி துகான்' நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது, ''உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு என்றே புதிய நாடாளுமன்றம் மற்றும் செங்கோல் என்ற நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார்'' என்றார்.
அமெரிக்காவில் ராகுல் காந்தி தனது பேச்சில், ''புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான செயலே தவிர வேறு ஒன்றும் இல்லை. செங்கோல் நிறுவப்பட்டது மக்களை திசை திருப்பும் ஒரு நாடகம். நாட்டின் உண்மையான பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் சிதைந்து வரும் கல்வி குறித்து பாஜகவால் விவாதிக்க முடியாது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் சமூகங்களின் மீது வெறுப்பு உருவாகிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உணருகின்றனர்'' என்றார்.
பிரதமர் மோடியின் நிழல் போல் செயல்படும் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல்
பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும், வேறு யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்றும் உறுதியாக நம்புகின்றனர். "வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், அறிவியலை விஞ்ஞானிகளுக்கும், போர் உத்தியை ராணுவத்துக்கும் விளக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இது மிகவும் அற்பத்தனமானது. அவர்கள் யார் பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை'' என்றார் ராகுல் காந்தி.
மேலும், ''பாஜக மக்களை மிரட்டுகிறது. அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். ஊடகங்கள் காட்டுவது இந்தியாவே அல்ல. பாஜகவுக்கு சாதாகமாக ஊடகங்கள் கதைகளை திரித்துக் காட்டுகின்றன. காவி கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவற்றை நம்ப வேண்டாம். நீங்கள் அவரை (பிரதமர் மோடியை) கடவுளுடன் உட்கார வைத்தால், அவர் அவருக்கு (கடவுளுக்கு) பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கத் தொடங்குவார்... மேலும் நான் என்ன படைத்தேன் என்று கடவுளே குழப்பமடைவார்.' என்று தெரிவித்து இருந்தார்.
மோடி அரசால் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
இந்தியாவில் இருந்து மே 30 ஆம் தேதி சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அடுத்து வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் செல்ல இருக்கிறார். ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் ஒரு பொதுக் கூட்டத்துடன் அவர் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார். இந்த உரையாடல் நியூயார்க்கில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் நடைபெற்றது. காந்தியின் கடைசி வெளிநாட்டுப் பயணம் இங்கிலாந்திற்குச் சென்றதாகும். அங்கு அவர் இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாகக் கூறி இருந்தார். இதற்கு பாஜக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சர் அனுராக் தாகூர் தனது கண்டனத்தில், ''பிரதமர் மோடியை ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ''பாஸ்'' என்று பாராட்டி இருந்தார். இதை ராகுல் காந்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசி இருப்பது நாட்டுக்கே அவமானம்'' என்று தெரிவித்துள்ளார்.