மோடி அரசால் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி, உண்மையான பிரச்சினைகளில் மோடி அரசால் செயல்பட முடியாது என்பதால், பிரதமர் இந்த காரியத்தை செய்தார் என்று கூறி உள்ளார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக சாடினார். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், நொறுங்கி கிடக்கும் கல்வி போன்றவற்றில் தனது அரசால் பணியாற்ற முடியாது என்றும், அதனால் தான் செங்கோல், பார்லிமென்ட் திறப்பு விழா போன்றவற்றை பிரதமர் மோடி செய்து வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்களுடன் நடந்ததே இந்தியா தான். பாரத் ஜோடோ யாத்ராவில் ஏராளமானோர் எங்களுடன் நடந்து சென்றது அன்பும் பாசமும் நிறைந்த சூழலை உருவாக்கியது.
பாரத் ஜோடோ யாத்ரா பாசம், மரியாதை மற்றும் பணிவு ஆகியவற்றின் உணர்வைக் கொண்டிருந்தது. குரு நானக் தேவ் ஜி, குரு பசவண்ணா ஜி, நாராயண குரு ஜி உட்பட அனைத்து ஆன்மீகத் தலைவர்களும் இதே வழியில் தேசத்தை ஒன்றிணைத்ததைக் காணலாம். பாஜகவை கடுமையாக சாடிய அவர், காவி கட்சி மக்களை அச்சுறுத்துகிறது மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்களை கிண்டல் செய்த ராகுல் காந்தி, "இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்திற்கு போரையும் விளக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதன் அடிப்படை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை” என்று கூறினார் ராகுல் காந்தி.
இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?