மகாராஷ்டிராவின் சாத்தாராவில், 27 வயது தாய் ஒருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 3 குழந்தைகளைப் பெற்றெடுத்ததால், மூன்று பிரசவங்களில் இவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலம், சாத்தாராவில், ஒரு தாய் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தனித்துவமான சம்பவம் நடந்துள்ளது. இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், இதே தாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்.

புனே மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான காஜல் விகாஸ் காகூர்தியா என்ற பெண்மணி, கோரேகான் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டாவது பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது மூன்றாவது பிரசவத்தில், மூன்று பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் குழந்தையையும் சேர்த்து நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

3 பிரசவங்களில் 8 குழந்தைகள்

இதன்மூலம், ஒரே தாய்க்கு மூன்று பிரசவங்களில் மொத்தம் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இது மருத்துவர்களையும், உறவினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாத்தாரா மாவட்ட மருத்துவமனையில் இத்தகைய ஒரு அரிய சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை.

இந்தச் சிக்கலான பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இந்த வெற்றிகரமான பிரசவத்திற்கு மருத்துவர் தேசாய், சல்மா இனாம்தார், கட்காரே, செண்டே, தீபாலி ரத்தோட் மற்றும் மருத்துவக் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். ஒரே தாய்க்கு இத்தனை குழந்தைகள் பிறந்ததால், மாவட்ட மருத்துவமனையில் மகிழ்ச்சி அலை பரவியது.