தேர்தல் என்னமோ 2 மாநிலங்களில்; ஆனா தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் அள்ளிய நன்கொடை ரூ. 545 கோடி!!
மத்திய அரசால் தேர்தல் பத்திரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்த அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் "மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டப்பேரவை தேர்தல்களின் போது தேர்தல் பத்திரங்களை விற்பதற்கு கூடுதலாக 15 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் கூடுதலாக 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் மத்திய அரசால் வழங்கப்பட்டு இருந்தது. 2022 ஆம் ஆண்டின், தேர்தல் பத்திரத் திருத்தத் திட்டத்தின்படி, மாநிலத் தேர்தல்கள் நடக்கும் ஆண்டுகளில் கூடுதலாக 15 நாட்கள் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தலின்போது மாநில கட்சிகளுக்கு உதவும் வகையில் இந்த திருத்தம் அமைந்துள்ளது. இந்த திருத்தம் மேற்கொண்ட அதே நேரத்தில் இமாசலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலில் சுமார் 545 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? எங்கு வாங்குவது? யார் வெளியிடுவார்கள்? இது கறுப்புப் பணமா?
தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2018ஆம் ஆண்டு முதல் 22 கட்டங்களாக பல்வேறு தரப்பு நன்கொடையாளர்களிடம் இருந்து கட்சிகள் வசூலித்த மொத்தத் தொகை ரூ.10,791 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் முந்தைய விற்பனையில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.389.50 கோடி மதிப்பிலான நன்கொடையை பெற்றுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டபேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள உள்ளன. அக்டோபர் 1 முதல் 10ஆம் தேதி வரை பெயர் வெளியிடாமல் நடத்தப்பட்ட 22வது தேர்தல் பத்திர விற்பனை மூலம் அரசியல் கட்சிகள் 545 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடை பெற்று இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.
லோகேஷ் கே பத்ரா என்பவர் இதுகுறித்த தகவல்களைக் கேட்டு ஆர்டிஐ-யில் விண்ணபித்து இருந்தார். இதன் மூலம் கிடைத்த தகவலின்படி, பல்வேறு கட்சிகள் 738 தேர்தல் பத்திரங்கள் மூலம் 542.25 கோடி ரூபாய் நன்கொடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திரங்களை விற்பதற்கு எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வசூலித்து இருக்கின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை 90 சதவீத நிதியை நன்கொடையாக வசூலித்துள்ளன. கடந்த 2019-20ஆம் ஆண்டில், பாஜகதான் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களின் மூலம் 75 சதவீதம் அளவிற்கு நன்கொடை பெற்று இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
தேர்தல் பத்திரங்கள் திட்ட விதிகளின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (1951 இன் 43) பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வெளியிட முடியும். மேலும், கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளை பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வெளியிட்டு நன்கொடை பெற முடியும்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் நிலவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெயர் வெளியிடப்படாமல் தேர்தல் பத்திரங்கள் வெளியிட்டு நன்கொடை பெறலாம் என்ற 2017ஆம் ஆண்டின் நிதித்துவ சட்டத்தை எதிர்த்து, அதே ஆண்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
எஸ்பிஐ தனது பதிலில், 542.25 கோடி மதிப்புள்ள மொத்தம் 738 தேர்தல் பத்திரங்களை சமீபத்தில் கட்சிகள் மீட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. எஸ்பிஐயின் ஐதராபாத் முக்கிய கிளையில் இருந்து ரூ.117 கோடியும், சென்னை கிளையில் இருந்து ரூ.115 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் முக மதிப்பு அடிப்படையில் இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பத்திரங்கள் மூலம் நன்கொடை வசூலில் டெல்லி ரூ. 285.15 கோடியும், கொல்கத்தா ரூ. 143.10 கோடியும், ஐதராபாத் ரூ. 67 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டில் 1056.73 கோடிக்கும், 2019ஆம் ஆண்டில் 5071.99 கோடிக்கும், 2020ஆம் ஆண்டில் 363.96 கோடிக்கும், 2021ஆம் ஆண்டில் 1502.29 கோடிக்கும், 2022 ஆம் ஆண்டில் 2,797 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. 25 கட்சிகள் தேர்தல் பத்திரங்களை விற்பதற்கு தங்களது கணக்குகளை பதிவு செய்து கொண்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து அக்டோபர் 29ஆம் தேதி வரை மத்திய அரசு 1000 தேர்தல் பத்திரங்களை ஒரு கோடி ரூபாய் முக மதிப்பில் அச்சிட்டுள்ளது.
யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
தேர்தல் பத்திரங்களை வாங்கும் நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்கள் அதில் இடம் பெறாது. ஆதலால், யார் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரமும் தெரிய வராது. ஆனால், இந்த தேர்தல் பத்திரங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் கறுப்புப் பணம் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் தேர்தல் பத்திரங்களை வெளிப்படைத்தன்மைக்காக மத்திய அரசு அறிமுகம் செய்தது.